Monday, August 14, 2017

சங்கயிலக்கியத்தில் சக்கரத்தான்

      ||ஸ்ரீ மதே ராமானுஜாய நம||
அவதாரப்புருஷனான எம்பெருமாள் எடுத்த அவதாரங்கள் பல.அவற்றை வடமொழி புராணங்கள் விதந்துரைக்கின்றன என்றாலும் நம் சங்கத்தமிழரும் அதை போற்றாமல் இருந்ததில்லை. அவ்வாறு கூர்ம,வராஹ, நரசிம்ம, வாமன,பரசுராம, பலராம,
இராம, கிருஷ்ண போன்ற எட்டவதாரங்களையும் சங்கஇலக்கியங்கள் சித்தரிக்குமாற்றை எடுத்துரைக்கும் எளிய பதிவே இது.
முதலாவதாக கூர்ம அவதாரம் பற்றி நோக்குவோம்.இந்திரன் இழந்த செல்வத்தை மீட்பதற்காக தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது,  மத்தாக இருந்த மேருமலை கடலில் அழுந்தத் தொடங்கியது.
தேவர்களுக்கு உதவ எண்ணிய திருமால் ஆமையாகஉருக்கொண்டு மேருமலையைத் தாங்கி நின்றார் என்பது புராணம். இச்செய்தியை பரிபாடற்தொகுதியில் 64ஆம் அடி தொடக்கம் 71ஆம் அடிவரையில் காணலாம்.
     




திகழ் ஒளி முந்நீர் கடைந்தக்கால், வெற்புத்
திகழ்பு எழ வாங்கித் தம்சீர்ச் சிரத்து ஏற்றி
மகர மறிகடல் வைத்து நிறுத்துப்
புகழ்சால் சிறப்பின் இரு திறத்தோர்க்கும்
அமுது கடைய இருவயின் நாண்ஆகி
மிகாஅ இருவடம் ஆழியான் வாங்க
உகாஅ வலியின் ஒருதோழம் காலம்
அறாஅது அணிந்தாரும் தாம்
  ஒளிதிகழும் திருபாற்கடலை கடைந்த பொழுது மந்தரமலையின் மத்தானது கடலில் ஆழத்தொடங்கியது. திருமால் ஆமையாக உருவம்கொண்டு (கூர்ம அவதாரம்)தனது சிறப்புடைய முதுகின்மேல் தாங்கி நின்று அதனை நிலைக்கச்செய்தார். மகரமீன்கள் உலாவும் கடலினினத்தே அவ்வாறு மலையை நிலைபெற நிருத்தினான். புகழ்நிரம்பிய தேவரும் அசுரர்களும் இருதிறத்தார்க்கும் அமுதம் கடைய உதவினான்.
இரண்டாவதாக வராஹ அவதாரத்தைநோக்குவோம்.இரணியனுடபிறந்த அசுரன் பூமியை சுருட்டிஎடுத்துக்கொண்டு கடலுக்குள் மறைந்து கொண்டான்.இச்செய்தியைக்  திருமாலிடம் கூறித் தமக்குஉதவுமாறு வேண்டினர் தேவர்கள். திருமால் வராக வடிவில் கடலுக்குள் சென்று தன் கொம்பின் உதவியால் நிலமகளை அசுரனிடம் இருந்து மீட்டார் திருமால்.இக்கதையை பரிபாடல் இரண்டாவது பகுதியில் 16ஆம் அடிதொடக்கம் 19ஆம் அடிவரை காணலாம்.






   கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரிய
ஊழி ஒருவினை உணர்த்தலின், முதுமைக்கு
ஊழி யாவரும் உணரா;
ஆழி முதல்வ! நின் பேணுதும் தொழுது
  ஊழிக்காலத்தால் எங்கும் பெருவெள்ளம் தோன்றின. அவ்வெள்ளத்துள் இவ்வுலகமே மூழ்கியது. திருமாலாகிய நீ தான் அவ்வெள்ளத்துள் மூழ்கினை:ஆங்கு வெள்ளத்தடியில் மூழ்கிய உலகை வெளியே கொணர்ந்து நிலை நிறுத்தினாய்.
கேழல்-பன்றி
ஒருவினை-திருவிளையாடல்
 மூன்றாவதாக நரசிம்ம அவதாரத்தை நோக்குவோம்.இரணியன் தன்னைவிலங்கு, மனிதர், தேவர் யாரும் கொல்லக் கூடாது; பகல், இரவு, வீட்டுக்குள், வெளியில் யாரும் எந்த நேரத்திலும்தன்னைக் கொல்லக்கூடாது. ஆயுதங்களாலும், தனக்கு அழிவுவரக்கூடாது எனப் படைப்புக் கடவுள் பிரம்மாவிடம் வரம் பெற்றிருந்தான். எனவே எல்லோரும் தன்னை வணங்க வேண்டும் எனக்கட்டாயப்படுத்தினான்.
தந்தை இரணியனை, திருமால் அடியவன் ஆன மகன் பிரகலாதன் வணங்க மறுத்தான். இருவருக்கும் நடந்த வாக்குவாதம் முற்ற இறைவனைக் காட்டு எனத் தந்தை கேட்க, மகன் ‘தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான்’ என விடை சொன்னான். இறைவன் நரசிம்ம வடிவங்கொண்டு தூணைப்பிளந்து கொண்டு வந்து இரணியனை இழுத்துத் தன் மடியில் கிடத்தித் தன் நகத்தால் கிழித்துக் கொன்றார் என்பது நரசிம்ம அவதாரபுராணம். இக்கதையை பரிபாடல்
நான்காம் பகுதி 10ஆம் அடிதொடக்கம் 21ஆம் அடிவரை பாடுகிறது.




  புகைந்த நெஞ்சின், புலர்ந்த சாந்தின்
பிருங்கலாதன் பலபல பிணி பட
வலந்துழி, மலர்ந்த நோய் கூர் கூம்பிய நடுக்கத்து அலர்ந்த புகழோன், தாதை ஆகலின் இகழ்வோன், இகழா நெஞ்சினனாக, நீ இகழா
நன்றா நட்ட அவன் நன் மார்பு முயங்கி,
ஒன்றா நட்டவன் உறு வரை மார்பின்
படிமதம் சாம்ப ஒதுங்கி,
இன்னல் இன்னரொடு இடி முரசு இயம்ப,
வெடி படா ஒடி தூண் தடியொடு,
தடி தடி பல பட வகிர் வாய்த்த உகிரினை;
  பிரகலாதன் நின்னை புகழ்ந்தான். அதனை கேட்ட இரணியன் புழுஙஎகியமனத்தோடு தன்மகனாகிய பிரகலாதனை பலவாறு கட்டிப்போட்டு துண்புறுத்தினான்.மனமும் உடலும் ஒடுங்குமாறு துன்புற்ற அவன் தந்தையை இகழ மனம்வராமலஎ துயரை பொறுத்தான். (நரசிம்மரான)நீயோ இரண்யனை இகழ்ந்து பிரகலாதனை பொருந்தினாய். உன்னை இகழ்ந்தும் உம் பக்தனை துன்புறுத்திய இரணியன் , பெருமலைபோன்ற மார்பினினத்து பாய்ந்து  அவன் செருக்கழியும்படியாக துண்டாகிப்போன தூண்களுடன் இரணியனது தசை துண்டாகி பலவாறு வீழுமாறு பிளந்தனை, அவ்வாறு வகிர்தலை செய்த நகங்களையுடைய நரசிம்ப பெருமானே!
 நான்காவதாக வாமனஅவதாரம்.  வடிவு கொண்ட அந்தணன் தோற்றத்தில் மகாபலிச் சக்கரவர்த்தியின் செருக்கை அடக்கியது வாமனஅவதாரம் ஆகும். அரசனிடம் மூன்று அடி மண் கேட்டு, பின் திரிவிக்ரமனாய் ஓரடியால் மண்ணையும், ஓரடியால் விண்ணையும் அளந்து, மூன்றாவது அடிக்கு இடம் இல்லாமல் போக, மூன்றாவது அடியை மகாபலி மன்னனின் தலையில் வைத்து அவனை பாதாளத்திற்குள் தள்ளியது வாமன அவதாரக் கதை.இந்த திரிவிக்ரம அவதாரத்தை பல மேற்கணக்கு நூல்கள் மட்டுமன்றி பெரும்பாணாற்றுப்படையிலும்(29-31) தொண்டைமான் இளந்திரையன் முன்னோருடன் திருமாலை ஒப்பிட்டுக் காட்டப்படுகிறது. இதை தவிற கலித்தொகை, உலகப்பெ்துமறை, பரிபாடலிலும் கூறப்படுகின்றது.





  திணிநிலம் கடந்தக்கால் திரிந்தயர்ந்து அகன்றோடி
நின்னஞ்சிக் கடற்பாய்ந்த பிணிநெகிழ்பு அவிழ்தண்தார்
அன்னவர் பட அல்லா அவுணர்க்கும் முதல்வன் நீ;
அதனால் பகைவர் இவர், இவர் நட்டோர் என்னும்
வகையும் உண்டோ, நின் மரபறி வோர்க்கே?
(பரிபாடல்-55).
பொருள்- திரண்ட அணுக்கூட்டங்களால் ஆனது இந்த உலகம். இதனை நீ உன் திருவடியால் முன்னொரு காலத்தில் அளந்தாய் (வாமன அவதாரம்). உன் உருவைக் கண்டு கலங்கிய அவுணர் (அசுரர்கள்) சிதறி ஓடினர், அவர்களுள் உன்னைச் சரணடைந்தோர்க்கும் நீயே முதல்வன் ஆகிறாய். அதனால், உனக்குப் பகை என்பதும், நட்பென்பதும் கிடையாது. இதனை உனது மரபை அறிந்தோர் நன்றாக அறிவர்.
  மடிஇலா மன்னவன் எய்தும் அடி அளந்தான் தாஅய(து)எல்லாம் ஒருங்கு
(அதிகாரம்:மடி இன்மை, எண்:610)
தன் அடியால் எல்லா உலகையும் அளந்த கடவுள் தாவியபரப்பு முழுவதையும், சோம்பல் இல்லாத அரசன் ஒருங்கே அடைவான்
  ஐந்தாவதாக பரசுராம அவதாரத்தை நோக்குவோம். ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகாதேவிக்கும் பிறந்த இவர் தந்தை சொல்லை காக்க தாயின்தலையை வெட்டியவர்.மட்டுமன்றி அந்தணர்குலத்தச காக்க மறுத்த ஷத்ரியகுலத்தை பூண்டோடு அழிக்க முயற்சித்தவர். இவ்வவதாரத்தை பற்றி மணிமேகலை காப்பியத்திலும் ஒருசெய்தி உண்டு. இதை தவிற அகநானூற்றில் 220பகுதியில் 5ஆம் அடி தொடக்கம் 9ஆம் அடிவரை திருமாலின் கூறாகிய பரசுராமன், முன்பு விடாமல் முயன்று முடித்த வேள்விக்களத்தில், கயிற்றில் சுற்றிக் கட்டப்பட்ட அழகிய தூண்போல என உவமிக்கப்படுகிறது.








 மன் மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன்
முன் முயன்று அரிதினின் முடித்த வேள்வி 
கயிறு அரை யாத்த காண்தகு வனப்பின்
அருங் கடி நெடுந்தூண் போல
மதம் பொருந்திய யானைகூட்டம் எல்லா போர் முனையிலே அழியுமாறு மன்னர்கள் பரம்பரையையே  வேறுடன் அறுத்த பரசாகிய வாளினுடைய பரசுராமன் முன்காலத்தில் அரிதாக செய்துமுடித்த வேள்வியிடத்தில் கயிற்றினை அரையிலே கட்டியிருந்த காணத்தகுந்த அழகுடைய அரிய காவலையுடைய வேள்வித்தூண்போல
என்று உவமையணி கையாளப்பட்டுள்ளது.









ஆறாவது அவதாரமாக இராமனை நோக்குவோம்.தசரத புத்ரனாய் அயோத்தியில் பிறந்து தந்தை சொற்கமைய வனவாசம் புகுந்து மனைவிைய இராவணனிடம் இருந்துமீட்டு நல்லாட்சி புரிந்த மனிதகுல மாணிக்கம் ஸ்ரீ ராமர். இவ்வவதாரத்தை பற்றி பல பல இடங்களில் போற்றியும் உவமிக்கவும் கையாளப்பட்டுள்ளது என்றாலும் ரத்தினச்சுருக்கமாக ஒரே பாடலில் காணலாம். 
  இராமன் அரக்கரை வெல்ல, போர் பற்றிய அரிய மறை(இரகசியச்) செய்தியை வானர வீரர்களோடு ஆராய்ந்தபொழுது பறவைகள் ஒலி எழுப்புகின்றன. அவ்வொலி பேச்சுக்கு இடையூறாக இருக்கின்றது. எனவே இராமன் பறவைகளின் ஒலியை, கேட்காமல் செய்தான். பல விழுதுகளை உடைய ஆலமரத்தில் இருந்த பறவைகள் ஒலி எழுப்பவில்லை. எனவே, ஆலமரம் ஒலியின்றி அமைதியாக இருந்தது என்பதை அகநானூற்றுப்பாடலில் 70ஆம் பகுதியில் 13ஆம் அடி தொடக்கம் 17ஆம் அடிவரை காணலாம்.
 வென்வேற் கவுரியர் தொல் முதுகோடி
முழங்குஇரும் பௌவம் இரங்கும் முன் துறை
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த
பல்வீழ் ஆலம் போல,
ஒலிஅவிந் தன்றுஇவ், அழுங்கல் ஊரே
 வெற்றி வேலினையுடைய பாண்டியரது
மிக்க பழமையுடைய திருவனைக்கரையின் அருகில் முழுங்கும் துறை முற்றத்திலே போரில் வெற்றிகொள்ளும் இராமன் இலங்கை படையெடுத்தல் பற்றிய மறைகளை ஆராயுமிடுத்து புல்லொளிகள் இலையாக செய்த பல விழுதுகளை கொண்ட ஆலமரம்போல ஆரவாரமுடைய அவ்வூரும் ஒளியடங்கப்பெற்றது.
கடுந்தெற ல்இராம னுடன்புணர் சீதையை
வலித்தகை யரக்கன் வௌவிய ஞான்றை
நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கன்
செம்முகப் பெருங்கிளை யுழைப்பொலிந் தாஅங்கு
அறாஅ அருநகை இனிது பெற்றிகுமே
புறநானூறு ( 378: 18-22)
ராமனுடன் வாழ்ந்த சீதையை அரக்கன் கவர்ந்து கொண்டு வந்தான். அப்பொழுது சீதை தான் அணிந்திருந்த நகைகளை ஒவ்வொன்றாகக் கீழே போட்டாள். அவை குரங்குக் கூட்டங்களின் கையில் கிடைத்தன. அக்குரங்குகளுக்கு நகைகளை எப்படி எங்கு அணிவது எனத் தெரியவில்லை. எனவே அவை மாறி மாறி அணிந்து கொண்டன. அதுபோலச் ‘சோழன் கோயிலில்’ பரிசில் பெற்ற பாணர்கள் கூட்டமும் செய்தது எனப் புறநானூறு இராமாயணத்தில் வரும் நிகழ்வுக் குறிப்புகளை உவமையாகக் காட்டுகின்றது







.
  ஏழாவது அவதாரமாக எம்பெருமான் பிறந்தது பலராமவடிவில். கண்ணனுக்கு அண்ணனாய். இவ்வவதாரம் பற்றி தனித்துவமான செய்தி இல்லையாயினும் கண்ணனுடன் இணைந்த பலராமர் பற்றி அநேகமான குறிப்புக்கள் இருந்தாலும் கூட ஓரிரண்டை மட்டும் நோக்குவோம். புறநானூற்றில் 58ஆம் பகுதியில் 14ஆம் அடிமுதல் 16அடிவரை நோக்கின் பின்வரும் செய்யுளை காணலாம்.
பால்நிற உருவின் பனைக் கொடியோனும்
நீல்நிற உருவின் நேமியோனும் என்று
இருபெருந் தெய்வமும் உடன் நின்றா அங்கு
     பால்நிறப்பனை கொடியோனும் (பலராமர்)நீல வண்ணத்திருமாலும் இருதெய்வமும் ஒருங்கே உள்ளீர்கள்
மாயோன் அன்ன மால்வரைக் கவாஅன்
வாலியோன் அன்ன வயங்குவெள் அருவி  
(நற்றிணை-32)
    என்று திருமாலுடன் (மலை போன்ற கரும்பச்சை நிறமுடையவன்) வெள்ளருவி நிறமுடைய பலராமனையும் குறிப்பிடுகிறார்.






  இறுதியாக ஈடுஇணையற்ற ஏகஇறைவனான ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தை பார்ப்போம். வசுதேவருக்கும் தேவகிக்கும் மகனாக உதித்து பலலீலைகளை புரிந்த பலசம்ஹாரங்களை புரிந்து பாரதபோரில் தர்மத்தை நிலைநாட்டி பகவத்கீதை எனும் வேதத்தை அழித்த பரம்பொருள். ஸ்ரீ கிருஷ்ணரை பற்றியும் அநேக தமிழ்செய்யுள் இருக்கிறது. அவற்றுள் சிலவற்றை மட்டும் நோக்குவோம். கிருஷ்ணருடைய லீலாவினோதங்களில் ஒன்றான கோபிகா வஸ்திராபரணத்தை அகநானூற்றுப்பாடலில் பகுதி 59 இல் 3ஆம் அடிதொடக்கம் 6ஆம் அடிவரை காணலாம்.
  வண் புனல் தொழுநை வார் மணல் அகன்துறை
அண்டர் மகளிர் தண் கழை உடீஇயர் 
மரம் செல மிதித்த மாஅல்

வடக்கின் கண்ணதாகிய நீர்வளம் அறாத யமுனையாற்றில் நெடியமணலையுடைய ஆற்றங்கரையில் நீராடிய ஆயர்மகளிர் தண்ணிய தழையாடியனையை உடுத்துக்கொள்ளுமாறு குருந்த மரத்தை வளைத்து தந்த திருமாலான கண்ணன்
  
மேவார் விடுத்தந்த கூந்தற் குதிரையை 
வாய் பகுத்து இட்டு புடைத்த ஞான்று இன்னன்கொல்
மாயோன் என்று; உட்கிற்று என்நெஞ்சு
(கலித்தொகை பகுதி 103இல் 53 ஆம் அடி முதல் 55வரை)
  கம்சன் அனுப்பிய குதிரை வடிவமாக வந்த அசுரனைக் கண்ணன்கொன்றான் என்பது முல்லைக் கலியில் உள்ளது. ஏறு தழுவிய ஆயர்களைத் தோழி தலைவிக்குத் தனித்தனியே காட்டுகின்றாள். ‘காயாம்பூங் கண்ணியைச் சூடிய பொதுவன் ஏறு தழுவிய பிறகு நிற்கும் காட்சி.
  இவ்வாறு பெருமாளின் அவதாரமகிமைகளை தமிழ்சுவை சொட்ட பாடி வணங்கியுள்ளனர் நம் சங்கத்தமிழர்கள். எனவே இவை மூலம் அறியவேண்டியது என்னவெனில் வடமொழி புராணங்களுக்கு சலைக்காமல் ஈடு இணையில்லா இறைவனை புகழ்ந்துரைக்கிறது தமிழ் இலக்கியங்கள். எனவே நாராயணனை துதிக்காதவன் தமிழனாகவே இருக்கமுடியாது.
இவ்வாறு பெருமாளின் அவதாரமகிமைகளை தமிழ்சுவை சொட்ட பாடி வணங்கியுள்ளனர் நம் சங்கத்தமிழர்கள். எனவே இவை மூலம் அறியவேண்டியது என்னவெனில் வடமொழி புராணங்களுக்கு சலைக்காமல் ஈடு இணையில்லா இறைவனை புகழ்ந்துரைக்கிறது தமிழ் இலக்கியங்கள். எனவே நாராயணனை துதிக்காதவன் தமிழனாகவே இருக்கமுடியாது.
    
நாராயணா என்னாத நாவென்ன நாவே,
கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே,
கண் இமைத்துக் காண்பார் தம் கண் என்ன கண்ணே? (சிலப்பதிகாரம்)

No comments:

Post a Comment

சரபேஸ்வர இடம்ப திக்காரம்

தமிழ்நாட்டில் சங்ககாலம் என்று வழங்கப்படும் ஆதிகாலத்தில் பாரததேச மக்கள் வேதமார்க்கத்தினின்றும் முறைதவறாமலிருந்தனர். அக்காலத்த...